காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
உடுமலை; பாலப்பம்பட்டி காளியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அருகே பாலப்பம்பட்டியில், சித்திவிநாயகர், ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. முதல் நாளில் காலை விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, குபேர மகாலட்சுமியாகம், தனபூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மறுநாள் திருமூர்த்திமலையிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசம், வாஸ்துசாந்தி, தீபாராதனை நடந்தது. கடந்த 15ம் தேதி, பக்தர்கள் பாலப்பம்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் கலசங்கள் யாகசாலைக்கு புறப்படுதல், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, முதற்கால யாக பூஜை, வேதபாராயணம் நடந்தது. நேற்றுமுன்தினம், காலையில் விசேஷ சாந்தி, யாகசாலை பிரவேசம், இரண்டாம் காலயாக பூஜையும், மாலையில் லலிதா சகஸ்ரநாம பாராயணம், மூன்றாம் கால யாகபூஜையும் நடந்தது. இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில் விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக வேள்வி, நாடிசந்தானம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு யாகசாலையிலிருந்து திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், தசதரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கபட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, வள்ளி கும்மியாட்டம் மற்றும் இசைநிகழ்ச்சிகளும் நடந்தன.