காரமடை அரங்கநாதர் கோயிலில் வற்றாத ‘கருட தீர்த்தம்’
மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, அரங்கநாத பெருமாள் கைங்கர்யத்துக்கும், தேர்த் திருவிழா முடிவில் நடக்கும் தீர்த்தவாரி உத்சவத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.
காரமடை அரங்கநாதர் கோவில் வளாகத்தில், கர்ப்பகிரஹத்துக்கு பின்புறம் உள்ள பிரம்ம தீர்த்தம், தினமும் பெருமாள் கைங்கர்யத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த கருட தீர்த்த தெப்பக்குளம், 176 அடி நீளம், 154 அடி அகலம், 75 அடி ஆழத்தில் உள்ளது. தெப்பக்குளத்தில் வறட்சி காலத்திலும், நீர் நிறைந்தே இருக்கும் என்பது அதிசயம். குளத்தின் நுழைவாயிலில் முடி காணிக்கை மண்டபம் உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள், இக்குளத்தில் இறங்கி புனித நீராடுவது வழக்கம். மேலும், வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி மாதம் 30 நாட்களும், இக்குளத்தில் இருந்து தீர்த்தத்தை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, பெருமாளுக்கும், அருகேயுள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கும் கைங்கர்யம் செய்வது வழக்கம். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலை சேர்ந்த பின், திருக்கோவில் ஸ்தலத்தார்களிடம் பூ முத்திரை பெற்ற தாசர்கள், தெப்பக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அரங்கநாதர், ஆண்டாள், ரங்கநாயகி ஆகிய சன்னதிகளில் ஊற்றி வழிபடுவர். ஒரு பக்தர், மூன்று முறை தெப்பக்குளத்தில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார். தீர்த்தம் எடுத்து வரும் பக்தர், வழிநெடுக, கோவிந்த பராக்... ரங்க பராக்... என்று சொல்லிக் கொண்டே வருவார். இது, தீர்த்த தெப்பக்குளம் என்பதால், இக்குளத்தின் நீரை வேறெதற்கும் பயன்படுத்துவதில்லை. காரமடை நகரை சுற்றியுள்ள விவசாயக் கிணறுகளுக்கு, நீரூற்று கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றனர் என, கோவில் பக்தர் ஒருவர் கூறினார்.