உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1000 ஆண்டு பழமையான சோழர் கோவில் சீரமைப்பு பணியில் மந்தம் ஏன்?

1000 ஆண்டு பழமையான சோழர் கோவில் சீரமைப்பு பணியில் மந்தம் ஏன்?

பொன்னேரி; பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத பர்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.


இக்கோவில், சோழர் கால கட்டடக் கலையை உணர்த்தும் வகையில் கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம், காமாட்சியம்மன், முருகன், விநாயகர், ஏழுமலையான் ஆகியவை தனித்தனி சன்னிதிகளுடன் அமைந்துள்ளன. இந்த கோவில் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கற்களால் நேர்த்தியாக கட்டப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில், சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, ஹிந்து அறநிலையத் துறை, 2020ல், 43.60 லட்சம் ரூபாயில் புனரமைப்பு பணிகளை துவக்கியது. கட்டுமான பணிகளுக்கு சிமென்ட், கம்பி உள்ளிட்டவை பயன்படுத்தாமல், பழமையான முறையில், சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. முருகன், விநாயகர் ஆகிய சன்னிதிகள் முடிக்கப்பட்டு, தற்போது காமாட்சியம்மன், பர்வதீஸ்வரர் சன்னிதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி, நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், முடிவு பெறாமல் மந்தகதியில் நடப்பதாக பக்தர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடக்கும், கடந்த நான்கு ஆண்டுகளாக விழா நடைபெறாமல் உள்ளது. கோவில் திருப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசும் கோவில் புனரமைப்பு பணிகளுக்கு தற்போது ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லாத நிலை உள்ளதால், கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !