கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED :429 days ago
கள்ளக்குறிச்சி; ஆத்துமாமனந்தல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ஆத்துமாமனந்தல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த ஜூலை 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கடந்த 2ம் தேதி பால்குட ஊர்வலமும், 11 நாட்கள் தினமும் இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. தேர்திருவிழாவையொட்டி நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பொதுமக்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களது நேத்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் முத்து மாரியம்மன் சுவாமியை தேரில் எழுந்தருள செய்த பிறகு தேரோட்டம் துவங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற தேர் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.