திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி பவுர்ணமி; லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி நாட்களில், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அம்மலையை ஞானிகள், சித்தர்கள், மகான்கள், கண்ணுக்கு புலப்படாமல் கிரிவலம் செல்கின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த நேரத்தில் கிரிவலம் சென்றால், அருணாசலேஸ்வரரரின் அருளாசியும், ஞானிகள், சித்தர்கள், மகான்களின் ஆசியும் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதன்படி ஆவணி மாத பவுர்ணமி திதி இன்று அதிகாலை, 2:58 மணிக்கு துவங்கி மறுநாள், 20ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை, 1:02 மணி மணி வரை உள்ளதால், அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். சாரை சாரையாக கிரிவலம் சென்ற நிலையில், சுமார் ஒரு கிலோமீட்டார் தொலையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.