மதுரையில் பக்தர்களை பரவசப்படுத்திய காஞ்சி மஹா பெரியவர் வாழ்க்கை நாடகம்
மதுரை; மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கில், எஸ்.எஸ் இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் சார்பில் காஞ்சி மஹா பெரியவரின் நுாற்றாண்டு கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகம் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன், ஜி.ஆர்.சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றி நாடகத்தை துவக்கி வைத்தனர். நாடகத்தை இளங்கோ குமணன் தொகுத்து வழங்கினார்.
மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் 2017 முதல் நடத்தி வருகிறது. மஹா பெரியவரின் பள்ளிப் பருவம் துவங்கி கனகாபிஷேகம் வரை முக்கியமான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகள், சிங்கப்பூர் என மொத்தம் 40 காட்சிகள் அரங்கேறியுள்ளன. மதுரையில் நேற்று 41வது காட்சி அரங்கேறியது. நாடகத்தில் 13 முதல் 30 வயது மஹா பெரியவராக தீரஜ்மோகன், 40 முதல் 60 வயது பெரியவராக இ.எம்.எஸ்.முரளி, 70 முதல் 100 வயது பெரியவராக வாசுதேவன் சிறப்பாக நடித்தனர். ஜெயந்தி கவுரி ஷங்கர், கார்த்திக், ரங்கபதி உள்ளிட்ட பலர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்தனர். இந்து மதத்தின் மேன்மை, கடவுள் வழிபாட்டின் அவசியம், எளிமையின் அருமை, அரசியலில் ஆன்மிகம், கல்வியின் முக்கியத்துவம், மதமாற்றம் பற்றிய தெளிவு, மனித வாழ்வின் சிறப்புகள், பணிவு, மனநிறைவின் முக்கியத்துவம், பணத்தாசையை கட்டுப்படுத்துவது, பிறருக்கு உதவுதல் என மஹா பெரியவரின் பல கருத்துகளை இந்நாடகம் வெளிப்படுத்தியது. நாடகத்திற்கு இசை – மாண்டலின் யு.ராஜேஷ், கலை – தோட்டாதரணி, எழுத்து, இயக்கம் – இளங்கோ குமணன், தயாரிப்பாளர்கள் – முரளிதரன், அனந்தகிருஷ்ணன். மஹா பெரியவரோடு பயணித்த உணர்வை இந்த மூன்று மணி நேர நாடகம் அளித்ததாக பார்வையாளர்கள் கூறினர். இந்நாடகத்தை புத்தக வடிவில் நீதிபதிகள் கார்த்திகேயன், ஜி.ஆர்.சுவாமிநாதன், சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டனர்.