சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்
சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (20ம் தேதி) முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகள் கழித்து வரும் 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 16ம் தேதி இரவு முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை 9.05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது . 12 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம் நடந்தது. இன்று (20ம் தேதி) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்ணியாகவாசனம், அக்னி ஸங்கிரஹணம், தீர்த்த ஸங்கிரஹணம், பிரசன்னாபிஷேகம், பிரதான ஆச்சாரிய தசவித ஸ்நானம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், அங்குரார்பணம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடக்கிறது. பூஜைகளை திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் தலைமையில் ஸ்தானிகர்கள் செய்து வருகின்றனர்.