உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அனுமதி இல்லாத நாட்களில் மலையேறும் அதிகாரிகள்; தர்ம சங்கடத்தில் வனத்துறை

சதுரகிரியில் அனுமதி இல்லாத நாட்களில் மலையேறும் அதிகாரிகள்; தர்ம சங்கடத்தில் வனத்துறை

ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அனுமதி இல்லாத நாட்களில் பல்வேறு அரசுத் துறையினர் மலையேறி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் வனத்துறை, காவல் துறையினர் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
2015 க்கு முன்பு வரை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். 2015ல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 10 பேர் பலியானதை அடுத்து பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதித்து வருகிறது. அதிலும் எதிர்பாராத விதமாக மழை பெய்தால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து பக்தர்கள் அடிவாரம் திரும்ப முடியாத அபாயகரமான சூழல் இருப்பதால் மழை நேரங்களில் பக்தர்களை மலை ஏற வனத்துறை அனுமதிப்பதில்லை. இதனால் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. இது சதுரகிரி பக்தர்களிடம் மிகுந்த மன வேதனையும், அரசின் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரதான பாதையான தாணிப்பாறை வழியாக பக்தர்கள் அனுமதிக்க படாத நிலையில் சாப்டூர் வனச்சரக பாதையிலான வாழை தோப்பு, வருசநாடு வழியாக பக்தர்கள் மலை ஏறுவதாகவும், அனுமதி இல்லாத நாட்களில் அரசின் பல்வேறு பதவிகளில் உயர் நிலையில் உள்ளவர்கள், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. தற்போது கோயிலுக்கு செல்லும் வழியிலும், மலைப்பகுதியிலும் யானைகள், கரடிகள் நடமாட்டம் உள்ள நிலையில் அரசின் உயர் நிலையில் உள்ளவர்கள் தங்களது சக நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ மலை ஏறுவது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் உள்ளது. அவ்வாறு மலையேறும்போது, எந்த நேரத்திலும் வனவிலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை உணராத நிலையில் அவர்களை கோயிலுக்கு அழைத்து சென்று வருவதில் வனத்துறையினர், போலீசார் மிகுந்த தர்ம சங்கட சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !