சங்கரநாராயண சுவாமி கோயிலில் மூன்றாம் கால யாக பூஜை; 23ம் தேதி கும்பாபிஷேகம்
சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகள் கழித்து, வரும் 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் விமானங்கள் மற்றும் கோபுரங்கள் புதிதாக வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கிறது. கோயிலில் பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.யாகசாலை பூஜை; இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்ணியாகவாசனம், அக்னி ஸங்கிரஹணம், தீர்த்த ஸங்கிரஹணம், பிரசன்னாபிஷேகம், பிரதான ஆச்சாரிய தசவித ஸ்நானம் நடந்தது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், அங்குரார்பணம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. யாகசாலை பூஜைகளை திருப்பரங்குன்றம் ராஜாபட்டர், பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் ஆகியோர் தலைமையில் ஸ்தானிகர்கள் செய்தனர். இன்று(21ம் தேதி) காலை 9.05 மணிக்கு ஆச்சார்ய விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், இரண்டாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடக்கிறது. முன்னதாக மூலமூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு ஆச்சாரிய விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மூன்றாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி நடக்கிறது. நாளை(22ம் தேதி) காலை 7.35 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், நான்காம் கால யாகபூஜை, திரவ்யாஹூதிநடக்கிறது. காலை 10.30 மணிக்கு பரிவார யாகசாலையில் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, உடன் பிரதான யாகசாலையில் மகா பூர்ணாஹூதி, உபசாரங்கள் நடக்கிறது. 11.45 மணிக்கு பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஆச்சரிய விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், ஐந்தாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பிம்பசுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி நடக்கிறது.கும்பாபிஷேகம்; 23ம் தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், ஆறாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி நடக்கிறது. 8 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்திராதானம், பிரதான கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. 9 மணிக்கு சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயணசுவாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 9.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயண சுவாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் உடன் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. யாகசாலை பூஜையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எம்பி., ராணி, கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி., சீனிவாசன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, கோயில் துணை ஆணையர் கோமதி, டிஎஸ்பி., சுதீர், நகராட்சி கமிஷனர் சபாநாயகம், கோயில் இன்ஜினியர் முத்துராஜ், உள்துறை கண்காணிப்பாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.