பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.பல்லடத்தை அடுத்த, மாதப்பூரில், பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், வரலாற்று சிறப்புமிக்க மிகப் பழமையான கோவிலாகும். இங்கு மூலவராக முத்துக்குமார சுவாமியும், மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில், நேற்று முன்தினம் காலை, சூரிய உதயத்தின்போது, மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இது குறித்து கோவில் பூசாரிகள் கூறுகையில், சுழற்சி முறையில் எப்போதாவது இது போன்ற அரிய நிகழ்வு நடப்பது வழக்கம். கடந்த, 2021ல் இதேபோன்று மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. தற்போது, மீண்டும் நேற்று சூரிய உதயத்தின் போதே, மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது என்றனர். மூலவர் மீது சூரிய ஒளி விழுந்ததில், மூலவர் சிலை தங்க நிறத்தில் ஜொலித்தது. பக்தர்கள் பலரும் இந்த அதிசயத்தை கண்டு முருகப்பெருமானை வழிபட்டுச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.