வரமூர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
கும்மிடிப்பூண்டி; அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கவரைப்பேட்டை அடுத்த அரியதுறை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு நிகராக போற்றப்படும் வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இம்மாதம், 19ம் தேதி, கணபதி, லட்சுமி, நவக்கிரக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவில் வெளிபுறத்தில் யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர் கொண்டு, இன்று காலை 9:00 மணிளவில், கோவில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தன. தொடர்ந்து, வரமூர்த்தீஸ்வரர், மரகதவல்லி, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வரமூர்த்தீஸ்வரரை வணங்கினர்.