காஞ்சி வரதர் கோவிலில் பக்தர்கள் பாதங்களை காக்க தார் சாலையிலும் ‛கூலிங்’ வர்ணம்
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களின் ஒன்றாக விளங்குகிறது. பல்வேறு புராண சரித்திர பெருமை கொண்ட இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவில் உள் மற்றும் வெளிபிரகார தரையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதம் சுடாமல் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில், வெள்ளை நிற ‛கூலிங்’ வர்ணம் மற்றும் தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில வாரங்களாக காஞ்சிபுரத்தில் கோடை வெயிலைப் போன்று வெயில் கொளுத்தி வருவதால், வரதராஜ பெருமாள் வெளியே உள்ள சன்னிதி தெருவில் இருந்து, தார் சாலையில் காலணி அணியாமல் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள், கால் சூடு தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், சன்னிதி தெருவில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து, மேற்கு ராஜகோபுரம் வரை, 300 மீட்டர் நீளத்திற்கு தார் சாலையில் வெள்ளை நிற ‛கூலிங்’ வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.