திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. தேரோட்டம் வரும் 2ம் தேதி நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நாளை (24ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியாக 28ம் தேதி இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆகஸ்ட் 29ம் தேதி காலையில் கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வருதல், 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். ஆகஸ்ட் 31ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2ம் தேதி காலை நடைபெறுகிறது.