ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா; அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!
கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.
விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம் இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே, அன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம் கண்ணனை பற்றிய துதிப்பாடல் பாடுவது, தோத்திர பாடல்கள் பாட வேண்டும்.
வருகிறான் கண்ணன்: கண்ணபிரான் கருணையே வடிவமானவர். தனக்கொரு அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை. தன் பக்தர்களை அவர் கைவிட்டதில்லை. துரியோதனன் தன் தளபதியாக பீஷ்மரை நியமித்திருந்தான். குரு÷க்ஷத்திர யுத்தத்தில் அவர் பாண்டவர்களுக்கு சாதகமாகச் செயல் படுகிறாரோ என்று சந்தேகப்பட்டு, மனம் அவர்களிடமும் உடல் இங்கேயும் இருக்கிறதோ என்று கோபப்பட்டான். பீஷ்மரும் கோபமடைந்து, இன்று நான் அர்ஜுனனைப் படுத்தும் பாட்டில், ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று சபதம் செய்துள்ள கண்ணனைக் கூட ஆயுதம் எடுக்க வைக்கிறேன் பார், என்றார். அதன்படி கடும் போர் புரிந்து அர்ஜுனனனை மயக்கமடையச் செய்தார். கோபமடைந்த கண்ணன், சக்கரம் ஏந்தி பீஷ்மரை நோக்கிப் பாய்ந்தார். கிருஷ்ண பக்தரான பீஷ்மர், சக்கரத்துடன் வரும் பரமாத்மாவை வணங்கி, தன் தலை கொடுக்க தயாராக நின்றார். அப்போது அர்ஜுனன் கண்விழித்து, கண்ணா! இது தகுமா! ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற சபதத்தை மீறிவிட்டாயே. இது அவமானமல்லவா? என்றான். அர்ஜுனா! எனக்கு வரும் அவமானம் முக்கியமல்ல! என் பக்தனின் உறுதிமொழி காக்கப்பட வேண்டும். பீஷ்மர் துரியோதனனிடம் இன்று என்னை ஆயுதம் எடுக்க வைப்பதாக உறுதியளித்தார். அதைக் காப்பாற்றவே அப்படி செய்தேன், என்றார். பக்தனுக்காக தன்னையே தாழ்த்திக் கொள்ளும் கருணைக் கடல் அவர்.