சிவபெருமானின் முக்கண்கள் எவை?
திருப்பூர்; ‘‘தேவாரம் உயிராகவும், உழவாரம் உடலாகவும், சித்தாந்தம் அறிவாகவும் இருக்கின்றன; இவை மூன்றுமே, சிவபெருமானுக்கு முக்கண்களாக இருக்கின்றன,’’ என, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவம் பேசினார். திருவையாறு ஐயாரப்பர் திருமுறை மன்றம், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருமுறை பண்ணிசை வகுப்பு, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் டி.எம்.ஆர்., தோட்டத்தில் உள்ள நால்வர் அரங்கில் ஒவ்வொரு மாதமும், நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. பயிற்சியில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. பயிற்சி அளித்துவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லசிவம் பேசியதாவது: பன்னிரு திருமுறைகள் உயிர்களுக்கு வழிகாட்டுகின்றன. இயல், இசை, நாடகம் என, தமிழ்மொழிக்கு முத்தமிழ் இருப்பது போல், சிவவழிபாட்டிலும் மும்முறை இருக்கிறது. தேவாரம் உயிராகவும், உழவாரம் உடலாகவும், சித்தாந்தம் அறிவாகவும் இருக்கிறது. இவை மூன்றுமே சிவபெருமானுக்கு, மூன்று கண்களாக இருக்கின்றன. தேவாரம் பாடினால், உள்ளம் செம்மையாகும்; உழவாரம் செய்தால், உடல் வலுவாகும்; சிவ சித்தாந்தத்தை அறிவதால், அறிவு மேம்படும். பன்னிரு திருமுறைகளே பழம் தமிழ் இசைகளாக இருந்துள்ளது; அதிலிருந்தே, கர்நாடக சங்கீதம் போன்றவை பிறந்துள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த தேவாரம் பண்ணிசை பாடலை, அனைவரும் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.