உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருகே பல்லவர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பல்லவர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு

செஞ்சி; செஞ்சி அருகே பல்லவர் காலத்து சிற்பங்களை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.  திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர், செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர் தலைமையில், தமிழ்த்துறை மாணவர்கள் முகில், ஈசாக் உள்ளிட்டோர் செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பல்லவர் கால சிலைகள் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து பேராசிரியர் சுதாகர் கூறியதாவது: இங்குள்ள பள்ளி வளாகத்தில் ஜேஷ்டா தேவி என்னும் மூத்த தேவி சிற்பம் உள்ளது. இச்சிற்பம் 105 செ.மீ., உயரமும் 80 செ.மீ., அகலமும் கொண்ட மென்கூட்டு சிற்பமாக உள்ளது. மூத்த தேவி 2 கால்களையும் பக்கவாட்டில் அகற்றிய நிலையில் 2 கரங்களை தொங்க விட்டவாறு வலது கரத்தில் மலரை கீழ் நோக்கி பிடித்த நிலையில் இடது கரத்தில் தொங்கவிட்டடியும் உள்ளன. காதில் தடித்த குண்டலமும், கழுத்தில் தடித்த அணிகலனும் உள்ளது. மூத்த தேவியின் வலது புறம் மகள் மாந்தினியும், இடது புறம் மகன் மாந்தன் எருமை தலையுடன் காணப்படுகிறார்கள். வலப்புறத்தின் கீழ் அவளது வாகனம் கழுதையும் அதன் கீழ் சக்கரம் போன்ற அமைப்பும், வலது புறம் காக்கை கொடியும் இடது புறம் கீழ் ஒரு ஆண் உருவம் நின்ற நிலையிலும், இதன் கீழ் கலசமும் உள்ளது. மூத்த தேவியின் இடை முதல் பாதம் வரை நீண்ட ஆடை முடிச்சுடன் தொங்குகிறது. கிராமிய கலை பாணியில் அமைந்துள்ள இதன் காலம் கி.பி., 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். மேலும், இக்கிராமத்தில் உள்ள குளக்கரை அருகே 8ம் நுாற்றாடைச் சேர்ந்த பல்லவர் காலத்து விஷ்ணு சிலை இரண்டும், விநாயகர் சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது. பெருமாள் சிலைகள் இரண்டும் 5 அடி உயரத்தில்  திறந்த வெளியில் உள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த சிற்பங்களை கொண்டுள்ள இவ்வூரானது பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதை அங்குள்ள கோவில்களும், சிற்பங்களும் எடுத்துக் காட்டுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !