உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சூர் ஓணம் பண்டிகை; வீதிகளில் புலிக்களி நடனம் வெகு விமர்சை

திருச்சூர் ஓணம் பண்டிகை; வீதிகளில் புலிக்களி நடனம் வெகு விமர்சை

பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி எல்லாம் ஆண்டும் புலிக்களி நடன நிகழ்ச்சி நடப்பது வழக்கம். நடப்பாண்டு புலிக்களி நடன நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடந்தது. உடல் முழுவதும் புலியை போல, தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் கூடிய முகமூடி அணிந்தும், இடுப்பில் சலங்கைகள் கட்டி 300க்கும் மேற்பட்ட கலைஞர் செண்டை மேள தாளத்திற்கு ஏற்ப தொப்பையை அசைத்து நடனம் ஆடி திருச்சூர் நகரை வலம் வந்தனர். மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை இந்த கொண்டாட்டம் நீடித்தது. திருச்சூர் நகரை சுற்றியுள்ள, பல்வேறு பகுதிகளில் இருந்து, குழுவுக்கு 35 முதல் 51 கலைஞர்கள் வீதம், புலி வேடம் அணிந்து இவ்விழாவில் பங்கேற்றனர். இதில் பெண்களும் சிறுவர்களும் புலி வேடம் அணிந்து நடனம் ஆடி உள்ளது குறிப்பிடப்பட்டது. இருளில் ஜொலிக்கும் எல்.இ.டி., புலி மற்றும் நகம் கொண்ட புலி வேடங்கள் நிகழ்ச்சியின் சிறப்பாகும். பல்வேறு கருத்தை விளக்கும் வேடங்கள் கொண்ட ஊர்திகள் நிகழ்ச்சியில் இடம் பிடித்திருந்தன. விழாவை திருச்சூர் மேயர் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மொபைல் போனில் செல்பி எடுத்து புலிக்களியை ரசித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !