வயதில் இளையவர் இவர்!
மகாவிஷ்ணுவை பக்தி பாசுரங்களால் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். மேய்ச்சலுக்குச் சென்ற பசு, மாலைநேரம் ஆனதும் கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்க நேரமாகிவிட்டதே என்று நினைத்து வருந்துமாம். அப்போது பசுவின் மடியில் பால் சுரந்துவிடும். அதுபோல, ஆழ்ந்த பக்தியினால் பெருமாளை எண்ணியவுடன் அடியார்களின் நாவில் பாடல்கள் சுரந்தன. அப்பாடல்களே பாசுரங்கள் எனப்பட்டன. ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்னும் பொருளில் அவர்களும் ஆழ்வார்கள் என்று சிறப்பிக்கப்பட்டனர். இவர்களைப் பன்னிரண்டாகச் சொன்னாலும், மேலும் சில ஆழ்வார்களும் இருக்கின்றனர். விஷ்ணுவுக்காக தந்தையை எதிர்த்தவர் பிரகலாதாழ்வார். சகோதர பாசத்திற்காக தாயை எதிர்த்தவர் பரதாழ்வார். அசுரனாகப் பிறந்தாலும் தர்மத்தோடு வாழவேண்டும் என்று அண்ணனை எதிர்த்தவர் விபீஷணாழ்வார். அண்ணனோடு தானும் காட்டுக்குச் சென்ற லட்சுமணர் இளையாழ்வார் என்று போற்றப் படுகிறார். ராமனை விட வயதில் இளையவர் என்னும் பொருளில் இப்பெயர் பெற்றார்.