விஜயீந்திர சுவாமி மடத்தில் யாத்ரி நிவாசுக்கு பூமிபூஜை
கும்பகோணம்: விஜயீந்திர சுவாமிகள் மடத்தில் கட்டப்படவுள்ள யாத்ரி நிவாசுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கும்பகோணம் சோலையப்பன் தெரு விஜயீந்திர சுவாமிகள் மடத்தில், புதிதாக கட்டப்பட உள்ள யாத்ரி நிவாசுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி சுயதீந்திர தீர்த்த சுவாமிகள் பூமி பூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த மடத்துக்கு பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும் வியாழக்கிழமைதோறும் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 28 தனி அறைகள், 4 பொது தங்கும் வசதி உடைய அரங்கம் மற்றும் குளியல், கழிவறை வசதிகளுடன், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் உபயதாரர் மூலம் கட்டப்பட உள்ளது. தரை தளம், முதல் மாடி, 2வது மாடி என, 20 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்குள் இப்பணிகளை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமிகளின் காரியதரிசி ஆனந்தராவ், தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழக நிர்வாகி ராஜாராம், விஜயீந்திர சுவாமிகள் மடத்தின் மேலாளர் பாஸ்கர், துணை மேலாளர் மாதவன், ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு பாலாஜி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.