கார்த்திகை தீப விழா வெள்ளி உண்டியல் வைப்பு
திருவண்ணாமலை: பாரம்பரியம் மாறாமல் இருக்க, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் நாளில் ஸ்வாமி சன்னதி முன் உள்ள கொடிமரம் முன் வெள்ளி உண்டியல் வைக்கப்படுவது வழக்கம். கோவிலில் வருமானம் குறையும் கால கட்டங்களில் வெள்ளி உண்டியல் காணிக்கை வசூலாகும் தொகையை வைத்து தீப திருவிழாவுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், நகரில் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்து வெள்ளி உண்டியல் வசூல் நடத்தப்படுவது வழக்கம். அழைப்பு விடுத்த முக்கிய பிரமுகர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவர் தற்போது, கோவில் வருமானம் பெருகி இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் இருக்க இன்றும் கோயிலில் வெள்ளி உண்டியல் வைக்கப்பட்டு பழைய முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, கணக்காளர் துவாரநாத், முன்னாள் நகராட்சி தலைவர் பவன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.