உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசரா விழா கோலாகல துவக்கம்; விழாக்கோலம் பூண்டது மைசூரு

தசரா விழா கோலாகல துவக்கம்; விழாக்கோலம் பூண்டது மைசூரு

மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.
கர்நாடக மாநிலம், மைசூரு தசரா விழா நேற்று துவங்கியது. மூத்த கன்னட இலக்கியவாதி நாகராஜய்யா, 88, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, 414வது ஆண்டு தசரா விழாவை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், ‘‘கன்னட மண், மொழி, நீருக்காக போராடுபவர்களை கொலையாளிகளாக பார்க்காமல், அன்புடன் பார்க்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்கும் யோசனைகள் யாருக்கும் வரக்கூடாது. ஆட்சியை கவிழ்ப்பது சுலபம்; ஆனால், அமைப்பது கடினம்,’’ என்றார். முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘‘எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும், சாமுண்டீஸ்வரியின் தயவால், ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்வோம்,’’ என்றார். துணை முதல்வர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தசரா விழாவை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. மலர் கண்காட்சி, பொருட்காட்சி, புத்தக திருவிழா, உணவு திருவிழா, மல்யுத்தம், விளையாட்டு போட்டிகள், திரைப்பட திருவிழா, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நேற்று துவங்கியதால், மக்கள் குவிந்துள்ளனர். மன்னர் ஆட்சி காலத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அரண்மனையின் தர்பார் மண்டபத்தில், மன்னர்கள் தர்பார் நடத்தி வந்தனர். புலவர்களை பாட வைத்து, பொறிகிழி, பரிசுகள் வழங்கினர். தற்போது மக்களாட்சி வந்த பின்னரும், அந்த பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. இதன்படி, தற்போதைய மன்னர் வம்சத்தின் யதுவீர், நேற்று தர்பார் நடத்தினார். வைரம், தங்கம், மாணிக்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களால், அலங்கரிக்கப்பட்டிருந்த 450 கிலோ எடையிலான ஜோடிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்தி, மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !