திருவண்ணாமலை தீபத்திற்காக 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
சென்னை: திருவண்ணாமலை தீப திருவிழாவிற்காக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் இருந்து, 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா கார்த்திகை தீப திருவிழா, இம்மாதம், 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் கோவில் முன், பரணி தீபமும், மாலை, 6 :00 மணிக்கு, சிவனாக வழிபடும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது, மஹா தீபமும் ஏற்ற உள்ளது. இந்த தீபத் திருவிழாவை காண, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், பல லட்சம் பக்தர்கள் கூடுவர். இவர்களின் வசதிக்காக, கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதன் முடிவில், சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பகுதிகளில் இருந்து, 400 சிறப்பு பஸ்கள்; திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 450 சிறப்பு பஸ்கள் என, மொத்தம், 850 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. தீபத்திற்காக, இம்மாதம், 26ம் தேதி, மதியம் துவங்கி, 27, 28ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில், கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.