பண்பொழி கோயில் தேருக்கு ரூ.16 லட்சத்தில் புதிய இரும்பு சக்கரங்கள்!
கடையநல்லூர்: நூறு ஆண்டுகளுக்கு மேலான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் திருத்தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் 16 லட்ச ரூபாய் செலவில் பொருத்தப்பட இருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான திருத்தேர் நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதாகும். இத்தேரில் உள்ள சக்கரங்கள் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய சக்கரங்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டு வந்தது. தைப்பூச திருவிழாவின் போது திருத்தேரோட்டம் பண்பொழி நான்கு ரதவீதி வழியாக நடத்தப்படுவதுண்டு. தேர் சக்கரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஆண்டு மாற்று ஏற்பாடாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சக்கரங்கள் கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து இக்கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் அமைத்திட வேண்டுமென கோயில் நிர்வாகம், டவுன் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், அதிமுக செயலாளர் பரமசிவன், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் மற்றும் மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர்.இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பண்பொழி கோயில் தேருக்கு புதிய சக்கரங்கள் பொருத்த 16 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.புதிய இரும்பு சக்கரங்கள் அமைத்திட 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத்துறை உயரதிகாரிகள் ஆகியோருக்கு பொதுமக்கள், பக்தர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.