உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ,வைணவ தலங்கள் இணைத்து திருச்செந்தூருக்கு ரயில்!

சிவ,வைணவ தலங்கள் இணைத்து திருச்செந்தூருக்கு ரயில்!

சிவகாசி: சிவ, வைணவ தலங்கள் இணைத்து, பழனி,மதுரை சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மார்க்கமாக, திருச்செந்தூருக்கு ரயில்இயக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் தொழில் நகரங்களாக உள்ளன. விருதுநகர் செங்கோட்டை மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றியதால், கூடுதல் ரயில் போக்குவரத்து இருக்கும், தொழில்கள் மேம்படும் என்ற கனவில் மக்கள் இருந்தனர். ஆனால், அகல பாதை பயன்பாட்டிற்கு வந்து, ஆண்டுகள் பல ஆகியும், இந்த வழித்தடத்தில் ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டதுதான் அதிகமாக உள்ளது. செங்கோட்டை சென்னை ரயில், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக தினம் நீண்டதூர ரயிலாக இயக்கியது. நாகூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் செங்கோட்டை, சிவகாசி விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக, நாகூர் வரை தினசரி இயக்கப்பட்டது.

கொல்லம் கோவை ரயில், செங்கோட்டை, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக ,கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது, இரவில் இயக்கப்பட்ட இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அகல ரயில்பாதை பணி முடிந்தது, சென்னை - செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை செங்கோட்டை ரயில்கள் மட்டுமே தினமும் இயக்கப்படுகின்றன. செங்கோட்டையில் இருந்து சிவகாசி, விருதுநகர் மார்க்கமாக மதுரைக்கு அதிகாலையில் இணைப்பு ரயில் விட வேண்டும். இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 6.30மணிக்கு கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு இணைப்பாக இயக்க வேண்டும். மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து செங்கோட்டை வரை ரயில் இயக்கிட வேண்டும். திருநெல்வேலி முதல் திருச்சி வரை புதிதாக இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு இணைப்பாக செங்கோட்டை விருதுநகர் வரை, இணைப்பு ரயில் விட்டால் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாககும். திண்டுக்கல் பழநி இடையே ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, தென்காசி, திருநெல்வேலி மார்க்கமாக, திருச்செந்தூருக்கு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால், அறுபடை வீட்டில் இருபடை வீடான பழநியும், திருச்செந்தூரும் இணைக்கப்படும். மேலும் இவ் வழித்தடத்தில், சைவ தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், சிவதலமான சங்கரன்கோயில் உள்ளன. திருச்செந்தூருக்கு இயக்கப்பட இருக்கும் ரயிலை, விருதுநகர், தென்காசி மார்க்கமாக இயங்கினால், பக்தர்கள் பலன் அடைவார்கள். ஐய்யப்பன் கோயில் சீசன் துவங்கியதால், பக்தர்கள் பலரும் செங்கோட்டையில் இருந்து பம்பை செல்ல உதவியாக இருக்கும் என, பொதுமக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !