தமிழகத்தில் கோவில் கட்டும் சுதா மூர்த்தி; சிறுவயது கனவு நிறைவேறுவதாக நெகிழ்ச்சி
பெங்களூரு: தமிழகத்தில் உள்ள குக்கிராமத்தில் கோவில் கட்டுவதற்கு, ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இவாநல்லூர் கிராமத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி உள்பட பல்வேறு கடவுள்களின் பழமையான சிலைகளை, சிறுசிறு குடிசைகளில் வைத்து, அந்த கிராமத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர்.முறையான கட்டுமானங்கள் இல்லாமல் கோவில்கள் இருப்பதைக் கண்டு மனம் வாடிய கர்நாடகாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி, இவாநல்லூரில் தனது சொந்த செலவில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிறுவயதில் எனது தாத்தா, நிறைய விஜயநகர பேரரசின் கதைகளை சொல்லுவார். கல்வியை போதித்தல், பிறருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தல், குளங்கள், கோவில்கள் கட்டுவது உள்ளிட்டவை செய்தால் தான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடையும் என்று அறிஞர்கள் சொல்லுவர்கள். கோவில்கள், குளங்களை மறுசீரமைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதால், புதிதாக கோவிலை கட்ட மறந்து விட்டனர். தற்போது, இவாநல்லூரில் கோவில் கட்டுவதன் மூலம், எனது ஆசை நிறைவேறியது, எனக் கூறினார். மேலும், தமிழக கிராமங்களில் பழமையான கடவுள் சிலைகள் இருப்பதாக நண்பரின் மூலம் தெரிந்து கொண்டதாகவும், இவாநல்லூரில் 18 மாதங்களுக்குள் சொந்த செலவில் கோவிலை கட்டி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் நடந்த கோவில் பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டதாகவும், பாரம்பரிய கலாசாரம் முறைப்படி கோவிலில் அனைத்து சடங்குகளும் செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.