விநாயகரை வழிபட்டு தீபாவளியை கொண்டாடிய ஸ்பெயின் பிரதமர்
மும்பை ; மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தன் மனைவி பெகோனா கோமஸ் உடன் பங்கேற்றார்.மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள ஐரோப்பிய நாடான ஸ்பெ யின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், குஜராத்தின் வதோதராவில், பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுபடுத்துவது குறித்து இரு தலைவர்கள் விவாதித்தனர். இதன்பின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு பெட்ரோ சான்செஸ் சென்றார். அங்கு, நேற்று முன்தினம் இரவு தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், தன் மனைவி பெகோனா கோமஸ் உடன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்றார். அப்போது இருவரும், மத்தாப்பு கொளுத்தியதுடன், பட்டாசுகளையும் வெடித்தனர். மேலும், லட்டு உள்ளிட்ட நம் நாட்டின் இனிப்புகளை அவர்கள் சுவைத்தனர். முன்னதாக மும்பை கடைவீதிகளுக்கு சென்ற பெட்ரோ சான்செஸ், அங்கிருந்த விநாயகர் சிலையை வாங்கினர். அதற்கு, டிஜிட்டல் யு.பி.ஐ., பரிவர்த்தனை வாயிலாக பணம் செலுத்தினார்.