உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரம் கோவிலில் கடை ஞாயிறு: ராகு பெயர்ச்சி விழா பந்தக்கால் நிகழ்ச்சி!

திருநாகேஸ்வரம் கோவிலில் கடை ஞாயிறு: ராகு பெயர்ச்சி விழா பந்தக்கால் நிகழ்ச்சி!

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா, ராகுபெயர்ச்சி விழாவையொட்டி பந்தக்கால் நடுதல், தேரடி முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாகிய நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு ராகுபெயர்ச்சி விழாவும் கார்த்திகை மாதத்தில் நடைபெறுவதால், இவ்விரு விழாவும் விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகத்தினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நவம்பர், 30ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. டிசம்பர், இரண்டாம் தேதி ராகுபெயர்ச்சி விழா நடக்கிறது. டிசம்பர் எட்டாம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை, 8 மணிக்கு கோவில் வாசல் கொடிமரம் முன்பாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. முன்னதாக அஸ்திரதேவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின், பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. உதவி கமிஷர் பரணிதரன் பந்தக்கால் நட்டார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கோவில் சிவாச்சாரியார்கள் சங்கர், சரவணன், ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து அஸ்திர தேவர் தேரடிக்கு புறப்பட்டார். பின் தேர் முகூர்த்தம் நடந்தது. அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !