திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், பூஜை நடந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து 30 படி பச்சரிசியினால் தயாரிக்கப்பட்ட சாதத்தின் மூலம் அன்னாபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில்களில் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
மலைக்குப் பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து அன்னம் சாத்துப்படி செய்து, பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டது. கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் சுந்தரேஸ்வரர், திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதர், பாண்டியன் நகர் கல்யாண விநயாகர் கோயில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.