உடுமலை சுற்றுப்பகுதிகளில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேக விழா நடந்தது.
கார்த்திகை மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகளிலும், கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், கார்த்திகை சோமவார சங்காபிஷேக விழாவையொட்டி, ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிவசகஸ்ரநாமம் மற்றும், 108 சங்காபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திப்பம்பட்டி சிவசக்தி கோவில் உள்ளிட்ட கோவில்களில், சோமவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம் நேற்று மாலை நடந்தது.பூஜையில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது.பூஜைக்கு பின், பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின் சங்காபிஷேக பூஜையும். அலங்கார பூஜையும் நடந்தது.
உடுமலை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேக பூஜை நேற்று நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை மற்றும் ஹோம பூஜைகள் நடந்தன. காலை, 11:30 மணிக்கு, காசி விஸ்வநாத சுவாமிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல், முத்தையா பிள்ளை லே – அவுட் சோழீஸ்வரர் கோவில், ருத்ரப்பநகர் விசாலாட்சியம்மன் உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், கார்த்திகை சோமவார சங்காபிஷேக விழா நடந்தது.