1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
விழுப்புரம்; மரக்காணத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த நூறு ஆண்டுக்கு மேலாக மறுசீரமைப்பு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கோயிலை மறு சீரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் சிறப்பு ஆராதனைகள் மற்றும் கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, பொது மக்களின் "ஓம் நமச்சிவாய" கோஷங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.