உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து மலையில் கார்த்திகை மகா தீபம்; ஜோதி மயமான திருப்பரங்குன்றம்

குன்றத்து மலையில் கார்த்திகை மகா தீபம்; ஜோதி மயமான திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று மாலையில் மலைமேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். நாளை (டிச.14) தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.


கார்த்திகை மகா தீபம்: தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தாமிர கொப்பரைக்கு இன்று காலை பூஜை முடிந்து மலைமேல் கொண்டு செல்லப்பட்டது. கோயிலுக்குள் அனுக்கை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. அதே நேரத்தில் மலை மேல் தீப மண்டபம் அருகில் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து விநாயகர் பூஜை, அக்னி லிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனைகள் முடிந்து தீப கொப்பரையில் புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பால தீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும் மலை மேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது. கோயிலில் மூலவர் சுப்ரமணிய சுவாமி முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது. 


குன்றத்தில் குவிந்த பக்தர்கள்: கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்திற்கு மதுரை, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்‌. கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் பாதயாத்திரையாகவந்து மலை சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். பலத்த மழை பெய்த போதிலும் பக்தர்கள் நனைந்தபடியே கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோயில் மூலஸ்தானத்தில் இலவச தரிசன பக்தர்கள் இரண்டு வரிசைகளிலும், கட்டண தரிசன பக்தர்கள் இரண்டு வரிசைகளிலும் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !