உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு வசதி

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு வசதி

கூடலுார்; மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைக்க வேண்டும் என வாணியர் சங்கத்தினர் பார்வையிட்டு வலியுறுத்தினர்.


தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் தமிழக கேரளா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கோயில் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை தொல்லியல் துறை சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர், பக்தர்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா நடைபெறும். இவ்விழாவிற்கு தமிழக கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.


கேரளா கெடுபிடி; குமுளியிலிருந்து கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., துார ஜீப் பாதை உள்ளது. இது தவிர தமிழக வனப்பகுதி பனியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரத்தில் நடைபாதை உள்ளது. நடந்து செல்ல முடியாதவர்கள் கேரளாவில் உள்ள ஜீப் பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பு இரு மாநில கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்படி விழா நடத்தப்படும். கேரள வனத்துறையின் பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே விழா நடப்பதால் தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


வாணியர் சங்கம் ஆய்வு; இந்நிலையில் நேற்று தென்னிந்திய வாணியர் சங்கம் மற்றும் தேனி மாவட்ட வாணியர் சங்கத்தினர் பளியன்குடியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வனப்பாதையை பார்வையிட்டனர். ஏற்கனவே பாதை அமைக்க ஆய்வு செய்வதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக பளியன்குடி மற்றும் தெல்லுக்குடி வனப்பாதையை ஆய்வு செய்து, சித்ரா பவுர்ணமி தினத்திற்கு முன்பு ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர். மாநில தலைவர் காந்தி, மாவட்டத் தலைவர் சுந்தரவடிவேல், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் முருகன், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !