உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு 1,000 லிட்டர் மது காணிக்கை!

காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு 1,000 லிட்டர் மது காணிக்கை!

தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பிரசித்தி பெற்றது. அங்கு காவல் தெய்வமாய், நதி கரையோரம் வீற்றிருக்கும் சோனைமுத்து கருப்பணசாமியும், கோயில் வழிபாட்டில் இடம்பெறுகிறார். கருப்பணசாமி என்றாலே, துடிப்பானவன் என்பது அனைவரும் அறிந்ததே! அதனால் தானோ, என்னவோ, அவரை நெருங்குவோரிடம், பயபக்தி இருக்கும்.  கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதிலும், கருப்பு கெட்டிக்காரர்  என்பதால், அவரை குளிர்விப்பதில்,  நம்மவர்கள், அதை விட  கெட்டிக்காரர்கள்.  சின்னமனூர் கருப்பணசாமிக்கு,  ஆண்டிற்கு ஒரு முறை ஆடியில் நடக்கும் பொங்கல் விழாவில், டாஸ்மாக்  சரக்குகளை காணிக்கையாய் குவித்து விடுகின்றனர். முன்பு, காய்ச்சும்  கலாசாரம் இருந்த போது, பேரல்களில் ஊற்றி, படைத்து வந்துள்ளனர்.  நாளடைவில், காய்ச்ச தடை வந்ததால், டாஸ்மாக் சரக்குகள், சத்தமில்லாமல் அணிவகுத்தன. காணிக்கை படைக்கும் நேரத்தில் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம், குவாட்டர், ஆப், புல், என, ஒரே  கிடிங்... கிடிங்... சத்தம் தான்.  குறைந்தது, 1,000 லிட்டர் மது,  காணிக்கையாக வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், வழக்கமாக நடப்பதை போல் இல்லாமல், படைக்கப்படும் அனைத்தும், சாமிக்கே தரப்படுகிறது. கருப்பணசாமியின் வலது புறத்தில் உள்ள குழி ஒன்றில், ஆயிரம் லிட்டர்  மதுவும், ஊற்றப்படுமாம். வழக்கமாய் அந்த குழியில் ஒரு லிட்டர் கூட  ஊற்றமுடியாது. விழா அன்று மட்டும், ஆயிரம் லிட்டர் மதுவை ஊற்றலாம். துளி கூட, மது வாசம் இருக்காது,  என்கிறார், கோயில் பூசாரி ரகுராமன். 

கருப்பா... உன்னை சந்திக்க வாறோம், ஆடி வரை பொறுப்பா... என, நீங்கள் சொல்வது, எங்களுக்கு கேட்கும் போது, கருப்பனுக்கு கேட்காதா...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !