உலக நன்மைக்காக சதசண்டி யாகம்; காஞ்சி விஜயேந்திரர் வழிபாடு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை பேரிடர்கள் நீங்கவும் சதசண்டி யாகம் நடந்தது. ஏழு நாட்கள் நடந்த யாகத்தில் 20க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். இந்த சதசண்டி யாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மகா திரிபுரசுந்தரீ சமேத ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடைபெற்றது. காஞ்ச காமகோடி பீடத்தினை ஆதிசங்கரர் தொடங்கி 70 பீடாதிபதிகள் அலங்கரித்துள்ளனர். தற்போது 70 வது பீடாதிபதியான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் திருவண்ணாமலை காஞ்சி மடத்தின் கிளையில் தங்கியிருந்து தினந்தோறும் காலை, மாலை உலக நன்மை வேண்டி ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்து வருகிறார். உலகம் முழுவதும் சுபிட்சம் மற்றும் அமைதி ஏற்படவும், இயற்கை சீற்ற இடர்பாடுகள் அறவே நீங்கவும் வேண்டி சதசண்டி ஹோமங்கள் கடந்த 22ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற 12 கால யாக பூஜையில் கடந்த 22ம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி கடந்த 6 நாட்களாக 11 கால யாக பூஜை நடைபெற்று. இன்று 20க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு 108 மூலிகைகளை கொண்டு 12-ம் கால பூஜை நடத்தி சதசண்டி யாகம் நடத்தி பூர்ணாஹூதி செய்தனர். இந்த சதசண்டி யாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.