சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவியத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12:00 மணி வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையிலும் பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் அமாவாசை வழிபாடு பூஜைகளை செய்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.