திருப்பரங்குன்றம் சமணர் குகையில் பச்சை பெயின்ட்டை அகற்றும் பணி
மதுரை; ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர். ‘வழிபட தடையில்லை’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதை உறுதிசெய்யும் வகையில், மலை மீதுள்ள சமணர் குகைகளை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் அடித்தும், சில வாக்கியங்கள் எழுதியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை புகாரில், மர்ம நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில், சமணர் குகைகளில் அடிக்கப்பட்ட பச்சை பெயின்ட்டை, தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர், பழமை மாறாமல் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இடங்களை வேலி அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.