அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குழந்தைகள் வடம் பிடிக்க உலா வந்த சுப்ரமணியர் தேர்
அவிநாசி; தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர் பவனி நடைபெற்றது. குழந்தைகள் வடம் பிடித்து ரத வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.
அவிநாசியில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஸ்வாமிக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகமும், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குட்டீஸ் தேர் எனப்படும் திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேரை குழந்தைகள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா வந்து சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பூச தேர் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.