திருமண தடை நீக்கும் கால பைரவர் கோவிலில் பக்தர்கள் கடும் அவதி!
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால், பெண் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள, ஆறகளூர் கிராமத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வேறெந்த சிவன் கோவில்களில் இல்லாத வகையில், "அஜிதாங்க பைரவர், ருருவ பைரவர், சண்ட பைரவர், குரோதான பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், ஸ்ரீ கால பைரவர் என, எட்டு பைரவர்களுக்கு சிலைகள் உள்ளன.
மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில், ஸ்ரீகால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு, பைரவரை வழிபாடு செய்தால், திருமணத் தடை, நவகிரக தோஷம், கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதனால், தேய்பிறை அஷ்டமி நாளில் மட்டும், சேலம், ஆத்தூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, கோவை, நாமக்கல், பெங்களூரு, புதுச்சேரி என, பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு மேல் வருகின்றனர். அப்போது, திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், இளம் பெண்கள் ஏராளமானோர் நெய் தீபம், செவ்வரளி பூ வைத்து, ஸ்ரீகால பைரவரை வழிபடுகின்றனர். நள்ளிரவு, 12 மணியளவில், ஸ்ரீகால பைரவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குவது வழக்கம். தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு பகுதிகளில் இருந்து வரும், பெண்கள், இளம் பெண்களுக்கு, கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதி இல்லை.
இதுகுறித்து, பெண் பக்தர்கள் கூறியதாவது: கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, ஸ்ரீகால பைரவர் அவதரித்த நாள் என்பதால், "பைரவ அஷ்டமி என, சிறப்பு பூஜை நடக்கும். இன்று, 6ம் தேதி, பைரவ அஷ்டமி என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பஞ்சாயத்தின் மகளிர் சுகாதார வளாகம், போதுமான தண்ணீர் இல்லாததால், பெண்கள் பயன்படுத்த முடிவதில்லை. நள்ளிரவு பூஜைக்கு பின், பெண்கள் கழிப்பிடத்துக்கு செல்வதற்கு, கோவில் நிர்வாகம் வசதி செய்து தருவதில்லை. ஓரிரு போலீஸார் பாதுகாப்புக்கு வருவதால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, இந்து அறநிலையத்துறை மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சங்கர் கூறியதாவது: காமநாதீஸ்வரர் கோவிலில், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணி நடந்து வருகிறது. தேய்பிறை அஷ்டமி நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கோவில் வளாகத்தில் குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதி செய்து வருகிறோம். நாளை (இன்று), ஸ்ரீகால பைரவர் அவதரித்த நாள் என்பதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். கோவில் அருகில், பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்ட பெண்களுக்கான கழிப்பிடம் உள்ளது. கூடுதல் கழிப்பிட வசதிக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.