கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன், உலக நன்மைக்காகவும், மாணவ– மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் தேர்ச்சி பெற்று வெற்றி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு, ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது.இதில், லட்சுமி ஹயக்ரீவருக்கு காலை 8:30– 12:00 மணி வரை, மாலை 4:00–7:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இதில், திரளான பள்ளி, கல்லுாரி மாணவியர் கோவிலுக்கு வந்தனர். தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களுடன், பே6னா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.