ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் மாசி தேரோட்டம் நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு பிப்., 18ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 9ம் நாள் விழாவான இன்று மகா சிவராத்திரி திருவிழா யொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோயில் கிழக்கு ரதவீதியில் அலங்கரிக்கப்பட்ட மாசி திருத்தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியா விடை அம்மன் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, கோயில் ஊழியர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர். பின் தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்து கோயில் நான்கு ரத வீதியில் வலம் வந்தனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.