உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எங்கும் சிவாய எதிலும் சிவாய; மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்

எங்கும் சிவாய எதிலும் சிவாய; மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்

மதுரை; ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி தினம், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சிவபெருமானின் அருள் பெற வேண்டி, சிவன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். வேதத்தில் சாமம், நதியில் கங்கை, விருட்சத்தில் அரசமரம், பஞ்சபூதத் தலங்களில் சிதம்பரம் எப்படி உயர்ந்ததோ, அதுபோல் விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி. திதிகளில் சதுர்த்தசிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன். அவருக்குரியது சிவராத்திரி. அதாவது தேய்பிறையின் பதினான்காம் நாளில் சிவனை வழிபடுவதால்  நன்மை கிடைக்கும்.  மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி தேய்பிறை சதுர்த்தசி ’மகாசிவராத்திரி’யாக சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை பூஜிப்பர். சிவராத்திரி பூஜையை முதலில் பார்வதியே முன்னின்று நடத்தினாள். அதில் மகிழ்ந்த சிவன் அருளை வாரி வழங்கினார். 


இத்தகைய சிறப்புமிக்க மகா சிவராத்திரி முன்னிட்டு இன்று, கோவில்களில், காலை முதலே, சிறப்பு வழிபாடுகள் துவங்கின. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு ஆறு கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.  மஹா சிவராத்திரியை முன்னிட்டு, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். 


திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் பொங்கல் விழாவில் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அலகு அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா சிவராத்திரி முன்னிட்டு சேலம், பொன்னம்மாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நெல்மணிகளால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. எங்கும் சிவ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஊட்டி பிரம்ம குமாரிகள் மையத்தில், சிவராத்திரியை முன்னிட்டு , சஹஸ்ர லிங்க தரிசனம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வாரணாசி, மகா கும்பமேளாவின் கடைசி நாளான மகாசிவராத்திரியை முன்னிட்டு, காசி விஸ்வநாதர் கோயிலை நோக்கி நாக சாதுக்கள் மற்றும் துறவிகள் சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்ய குவிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !