உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜ சோழன் மனைவி பஞ்சவன்மாதேவி பள்ளி படை கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

ராஜராஜ சோழன் மனைவி பஞ்சவன்மாதேவி பள்ளி படை கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், மங்கள நாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் ராஜராஜனின் 5வது மனைவியான பஞ்சவன் மாதேவியின் பள்ளி படைகோயிலாகும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகும். 


ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் மீது பஞ்சவன்மாதேவி மிகுந்த பாசம் கொண்டு, தனது சொந்த மகனாக வளர்த்து, தனக்குக் குழந்தைகள் பிறந்தால் ஆட்சி பீடத்திற்குப் போட்டிக்கு வந்து விடும் என, தனக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்று மூலிகை மருந்து குடித்து, மலடாக்கிக் கொண்டது தொடர்பாக கல்வெட்டு ஒன்று உள்ளது.  இத்தியாகத்தை போற்றும் வகையில், பஞ்சவன் மாதேவி மறைவுக்கு பிறகு, ராஜேந்திர சோழன், மங்கள நாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலை அமைத்தார். இக்கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு, 61 லட்சம் ரூபாயில், கும்பாபிஷேக பணிகளுக்காக, கடந்த 2023, ஜூலையில் பாலாலயம் நடந்தது.  தற்போது, திருப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நேற்று கோவிலின் வடக்கு பிரகாரத்தில், பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறநிலையத்துறை இணை கமிஷனர், சிவக்குமார், உதவி கமிஷனர் ஹம்சன், செயல் அலுவலர் நிர்மலா, புலவர் செல்வசேகரன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுப் பேராசிரியர் ரமேஷ் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டனர்.


இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வடக்குப் புற பிரகார தரை தளத்தைச் சீரமைக்கும் பணியின் போது, அப்பகுதியில் உள்வாங்கியது. அந்த தரை தளத்தை மேலும் அகற்றிய போது, சுமார் 6 அடி ஆழத்தில் 12 அடி நீளத்தில் பாதாள அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அகற்குள் மண்ணாக இருப்பதால் உடனடியாக உள்ளே இறங்க போதிய வசதி இல்லாததால், விரைவில் உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்படும். பாதாள அறையை சுற்றி பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கம்பி வேலிகள் அமைக்கப்பட உள்ளது இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !