உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகின் முதல் சிவாலயம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உலகின் முதல் சிவாலயம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ராமநாதபுரம்; உலகின் முதன் முதலில் தோன்றிய சிவன் கோயில் என்றழைக்கப்படும்  ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 


இக்கோயில் கும்பாபிஷேக விழா  மார்ச் 31ல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. ஏப்.1ல் இங்குள்ள அபூர்வ மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு  அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு ஆறு கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது, தொடர்ந்து வேத மந்திரம் முழங்க கணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காலை 6:00மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:00 முதல் ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன் மூலவர்களுக்கு  கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் செய்து  புதிய சந்தனகாப்பிடும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு  மங்களநாதர் சுவாமி,  மங்களேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


பரமக்குடி, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 சிறப்பு பஸ்கள் உத்தரகோசமங்கை கோயிலுக்கு இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வருகையை பொருத்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !