சோமவார சிறப்பு பூஜை திரளான பக்தர் பங்கேற்பு!
ஆத்தூர்: ஆத்தூர் பகுதி சிவன் கோவில்களில், சோமவார சிறப்பு பூஜைகள் நடந்தது.தமிழ் மாதமான, கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான், "அக்னி (நெருப்பு) பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில், இறைவனை குளிர்விக்கும், சங்காபிஷேக பூஜை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள, கோட்டை காயநிர்மலேஸ்வரர் (அக்னி ஸ்தலம்), தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், நேற்று, சோமவார சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி, 108 வலம்புரி சங்குகளில் உள்ள, மூலிகை நீரில், சிவலிங்கத்துக்கு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, காயநிர்மலேஸ்வரர், சொர்ணபுரீஸ்வரர் வெள்ளி கவசம், புஷ்பம் என, சர்வ சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.* அதேபோல், தலைவாசல் அருகே, ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், ஆத்தூர் கைலாசநாதர் உள்ளிட்ட கோவில்களில், சோமவார சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.