திருப்புத்தூர் வசந்தப் பெருவிழா : பூமாயி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழா மூன்றாம் திருநாளை முன்னிட்டு நேற்று பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வேண்டினர். இக்கோயிலில் ஏப்.17 ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் மாலை கொடியேற்றி காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் சர்வ அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி திருக்குளம் வலம் வருகிறார். இரண்டாம் திருநாளில் அம்மனுக்கு ஊஞ்சல் வைபவம் நடந்தது. மூன்றாம் திருநாளை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் சப்தமாதர் அம்மனுக்கு அலங்காரத் தீபாராதனை நடந்தது. ஏப்.22ல் பால்குடம் எடுத்தலும்,ஏப்.26 இரவில் அம்மன் ரத ஊர்வலமும், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள்நீராட்டும், இரவில் தெப்பத்திருவிழா, திருக்குள தீபவழிபாடும் நடைபெறும். தொடர்ந்து காப்புக்களைந்து விழா நிறைவடையும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழுவினர் செய்கின்றனர்.