சபரிமலையில் 18ம் படியேற 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
சபரிமலை: அய்யப்ப தரிசனத்திற்காக, சபரிமலையில் பக்தர்கள், 18 மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. தமிழக பக்தர் உட்பட மூவரை பாம்பு தீண்டியது. மாரடைப்பு காரணமாக, இருவர் பலியாயினர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். நேற்று முன் தினம், சபரிமலை வந்த பக்தர்கள், பதினெட்டாம் படி ஏறுவதற்கும், மூலவரை தரிசிப்பதற்கும், 18 மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. பதினெட்டாம் படி வழியாக, கோவிலுக்குச் செல்ல, ஒரு நிமிடத்தில், 80 முதல், 100 பக்தர்களை ஏற்றி விட்டால் மட்டுமே, விரைவாக தரிசனம் செய்ய இயலும்.ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், தங்களது பணி முடிந்து, பிற போலீசார் வந்து சேருவது போன்ற பல்வேறு தாமதங்களால், 50 முதல், 60 பக்தர்கள் மட்டுமே படி ஏற முடிகிறது. இதனால், சன்னிதானம், மரக்கூட்டம், நீலிமலை, பம்பை போன்ற இடங்களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். மேலும், பம்பையில் இருந்து, 10ம் தேதி மதியம், 12 மணிக்கு, சபரிமலை நோக்கிப் புறப்பட்ட பக்தர்கள், மறுநாள், 12 மணிக்கு சரங்குத்தி வரை மட்டுமே செல்ல முடிந்தது. குடிநீர், உணவு கிடைக்காமல், பல்லாயிரம் பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருக்க நேர்ந்தது. இதனால், 46 பேர் மயங்கி விழுந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார், 16, ஆந்திராவைச் சேர்ந்த சிவய்யா, 56 மற்றும் கேரளா, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அனூப், 25, ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, பாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில், அவர்கள் மூவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீலிமலை ஏறும்போது, மயங்கி விழுந்த இரு பக்தர்கள் மாரடைப்பால் இறந்தனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.