த.வெ.க., வேட்பாளர் பட்டியலுடன் புஸ்ஸி ஆனந்த் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தரிசனம்
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சள் உற்சவத்தில் த.வே.க., பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வேட்பாளர் பட்டியலை வைத்து அம்மனை வழிபட்டார்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடத்தியதுடன், வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த முறை த.வெ.க., தனித்து போட்டியிடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. நேற்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 11.10 மணிக்கு துவங்கி இரவு 12.20 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க., பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். அப்போது த.வெ.க., வேட்பாளர் பட்டியலை அம்மன் முன்பு வைத்து வழிபட்டார். பின்னர் கருவறையில் சாமி தரிசனம் செய்தவர், கருவறை முன்புள்ள சன்னு முனிவர் ஜீவசமாதி முன்புள்ள மேடையில் தரையில் அமர்ந்து வணங்கினார். கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் புஸ்ஸி ஆனந்துடன் செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் இரவு 12.30 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். மேல்மலையனுாரை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் உடன் வந்திருந்தார்.