வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
மயிலாடுதுறை; கார்த்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தருமை ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இங்கு நவகிரகங்களில் செவ்வாய் பகவான், அறுபடை வீட்டுக்கு இணையான செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தில் அதிபதி தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாள் செல்வ முத்துக்குமார சுவாமியை தரிசித்தால் 4448 நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு மாத கார்த்திகையில் செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத கார்த்திகை தினமான இன்று செல்வ முத்துக்குமார சுவாமியை சண்முகர் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து தர்மபுபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் ஆதீனம் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.