உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெம்பாவையின் சிறப்பு!

திருவெம்பாவையின் சிறப்பு!

திருப்பாவை என்னும் அரும்பெரும் நூலை நமக்களித்தவள் ஆண்டாள். வேதத்தின் சாரம் என்று இதைப் போற்றுவர். இந்த நூலிலுள்ள சில சிறப்பம்சங்களைத் தெரிந்து கொள்வோமா! கற்றுக்கறவை கணங்கள் (பாடல் 11)என்று துவங்கும் பாடலில் புனமயில் என்ற சொல் வருகிறது. ஆண்டாள் தன் தோழியை அப்படி அழைக்கிறாள். இதற்கு பெண்மயில் என்று அர்த்தம். ஆண்டாளின் தோழிகள் மயில் போன்று அழகு மிக்கவர்கள். இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், புனமயில் என்றால் குரு என்ற அர்த்தமும் உண்டு. ஆண்டாள் நமக்கு குருவாக இருந்து இறைவனின் திருவடியில் கொண்டு சேர்க்கும் பணியை திருப்பாவை மூலம் அழகாகச் செய்திருக்கிறாள்.

பசு பாதுகாப்பு: பால் உலகத்திலுள்ள அத்தனை பேருக்கும் சிறந்த உணவு. ஆனால், கன்று இல்லாத பசுவின் பாலைக் குடிக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். ஆண்டாள் திருப்பாவையில், தங்கள் பகுதி பசுக்களை கற்று கறவை என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறாள்.  அதாவது ஏகப்பட்ட கன்றுகளுடன் கூடிய பசுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தன. அவற்றிடம் பால்  கறப்பவர்களுக்கு கைகள் ஓய்ந்து போகும். அந்தளவுக்கு பால் கொட்டும். அக்காலத்தில், பசுக்களைப் பாதுகாத்தால் நாடே செழிப்பாக இருந்தது என்பதை இதன்மூலம் உணர்கிறோம். இன்றும் கூட மகான்கள் பசுக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார்கள்.

மனதில் இனிமை: மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய் என்பது திருப்பாவை வரி. இதில் குறிப்பிடப்படும் மனதுக்கு இனியவன் யார் தெரியுமா? ஸ்ரீராமன். ராம சகோதரர்கள் தொட்டிலில் படுத்திருந்தார்கள். குலகுரு வசிஷ்டர், குழந்தைகளைப் பார்க்க வந்தார். அவர்களில் ராம குழந்தை மிகவும் அழகாக இருந்ததைக் கண்டு, எனக்கு இப்படி ஒரு பிள்ளை இல்லையே! என்று மனதுக்குள் வருத்தப்பட்டார்.  பிறகு இன்னொன்றுக்காக வருத்தப்பட்டார். ஐயோ! பிறர் பிள்ளை போல் எனக்கு பிள்ளை இல்லை என்று நினைத்தது ஒருவேளை பொறாமை யினாலோ! ஆகா! இந்த எண்ணத்தை கைவிட வேண்டும், என்று உடனே அதை மறந்துவிட்டார். மற்றவர்களுக்கு நல்வாழ்வு கிடைத்து, நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே என பொறாமைப்படக்கூடாது என்ற நல்ல கருத்தை இதன் மூலம் ஆண்டாள் நமக்கு வழங்கியிருக்கிறாள். இப்படி சிறப்பான பல கருத்துக்களை உள்ளடக்கியிருக்கும் திருப்பாவையை மார்கழியில் பாடி மகிழ்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !