உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 கோடியில் திருப்பணி; பாலாலயம் நடைபெற்றது

வடபழனி ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 கோடியில் திருப்பணி; பாலாலயம் நடைபெற்றது

சென்னை; வடபழனியில், நுாற்றாண்டு பழமையான ஆதிலட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில் உள்ளது. உற்சவராக கஜேந்திர வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், வேணுகோபாலன், ஆண்டாள், ராமானுஜருக்கு சன்னிதிகள் உள்ளன. பஞ்சராட்சர ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வடபழனி முருகன் கோவிலின் உப கோவிலான இங்கு, 1960ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  இந்நிலையில், அறநிலையத்துறை கமிஷனரின் பொதுநல நிதி, 1.84 கோடி ரூபாய் மற்றும் வடபழனி முருகன் கோவில் நிதி, 1.53 கோடி ரூபாய் என, 3.37 கோடி ரூபாயில், ஆதிமூலப் பெருமாள் கோவிலில், திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பாலாலயம், இன்று காலை கோவிலில் நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறை கூடுதல் கமிஷனர் பழனி, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தி.நகர் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதிமூலப் பெருமாள் கோவில் திருப்பணியில் மூலவர், தாயார் சன்னிதி முன்புற கல்மண்டபம், கோவிலின் மூன்று புறங்களிலும் நுழைவுவாயில்கள், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !